தை பிறந்தால் வழி பிறக்கும்
நாணி தலை குனிந்து
தொங்கும் பயிர்களை
பரவசத்துடன் பார்த்து
பட்ட பாட்டுக்கு
பலனை எதிர்பார்த்து
பாடுபட்டு உழைத்த
நெல்மணிகளை
அறுவடை செய்து
அறுவடை செய்த நெல்லை
வீட்டுத் தேவைக்கு போக
விற்று காசாக்கி
பெற்ற மகவுகளுக்கு
நகை நட்டு சேர்த்து
அடுத்த விதைப்புக்கான
நெல் மணிகளை சேமித்து
இயற்கை பொய்த்தாலும்
அடுத்த வருடம் நன்றாக இருக்கும்
என்று நம்பிக்கை வைத்து
பழையதை பொசுக்கி
வீட்டையும், மனசையும்
சுத்தமாக்கி
வீட்டுக்கு வெள்ளை அடித்து
மாவிலை தோரணம் கட்டி
வீட்டுக்கும், மாட்டுக்கும்
புது பொலிவு கொடுத்து
குடும்பத்தினருக்கு
புதுதுணி எடுத்துக் கொடுத்து
அழகு பார்த்து
கால் நடை செல்வங்களை
வாஞ்சையோடு கொஞ்சி அழகுபடுத்தி
பசு மஞ்சளை
புதுப்பானை கழுத்தில்
அணிவித்து
இனிப்பு கரும்புகளை
பானையைச் சுற்றி
சுவர் எழுப்பி
நறுமண திருநீறு, சந்தன
சாந்தை தனக்கும்
பொங்கல் பானைக்கும்
பூசி
நெய், முந்திரி, ஏலக்காய் மண
பச்சரிசி வெல்ல பொங்கலிட்டு
சோறு போடும் விவசாயிக்கு, இயற்கைக்கு,
மழைக்கு, சூரியனுக்கு நன்றி சொல்லி
புதுப்பானை பொங்கலோட
சூரியனுக்குப் படைத்து
பட்ட கஷ்டங்கள் எல்லாம்
பஞ்சா பறந்து போக
பொங்கலோ பொங்கல்
என்று குலவையிட்டு
மாடு பிடித்து
தமிழன் தன் வீரத்தை
உலகுக்கு பறை சாற்றி
காணும் பொங்கலில்
நண்பர்களை சந்தித்து
அலவலாவி யென
தை பிறந்தால்
இல்லங்களில், உள்ளங்களில்
சந்தோசம் பிறக்கும்
தை பிறந்தால்
செல்வம், சேமிப்பு பெருகும்
தை பிறந்தால்
கடன் தீரும்
தை பிறந்தால்
அடுத்த வருடத்திற்கான
முதலீடு பெருகும்
தை பிறந்தால்
அடுத்த ஒரு வருட
உழைப்புகான
ஆற்றலை கொடுக்கும்
தை பிறந்தால்
முன்னேற்றம் பிறக்கும்
தை பிறந்தால்
புது நம்பிக்கை பிறக்கும்
தை பிறந்தால்
தமிழர்தம் வாழ்வில்
புது வழி பிறக்கும்
Leave a comment