அப்பா, அம்மாவுக்கு மட்டும் மகளல்ல
நம் மக்களுக்கும் மகள்
செல்லமகள் தைமகள்
இத் திருமகள் நன்னாளில்
வெள்ளையும், சுள்ளையுமாக
எல்லா வலி, பாட்டை மறந்து சிரிக்கும்
எளிமையே அழகு என்று
வசீகரிக்கும்
விவசாயப் பெருமக்கள்
நம் வீட்டு அழகுக் கலை
நிபுணர்கள் அலங்கரித்த
புதுப் பொலிவோடு
சந்தோசத் துள்ளல் போடும்
கால்நடைச் செல்வங்கள்
பனங்கிழங்கு,
சிவப்பூடுருவிய
அடிக்கரும்பு, நெய் மணப் பொங்கல்
சுவை
நம் வயதொத்த நமுட்டுச்சிரிப்பு
அழகு பெண்களை
பார்த்து ரசித்தது
விளையாட்டுப் போட்டியில்
வாங்கிய சோப்பு டப்பா பரிசு
ஜல்லிக்கட்டு காளைகளை
நம் வீட்டுக் குழந்தைகளே
கயிறு பிடித்து
இழுத்து வரும் அதிசயம்
சரியாக வெல்லம் உடைக்கும் போது
எப்போதும் கிடைக்காத சுத்தித் தேடும்
சிறு கலவரம்
பொங்கலோ பொங்கலென்று
நம் குலவையோடு சேர்ந்து
தக தகவென்று கொதித்து
சத்தமிடும் பொங்கல் பானை
பொங்கலன்று புதுத் துணியில்
மஞ்சள் வேண்டாம்
என்று குழந்தைகள் சொல்வதைக் கேட்டு
மிரளும் அயலகத் தமிழர்கள்
பொங்கல் திருவிழாக் கொண்டாட்டத்தை
மெய்நிகர் நிகழ்வில
பெற்றோர்களுக்கு
காண்பிக்கும் அடுத்தத் தலைமுறை
இனிதினிது அத்தனை நினைவுகளும்
தை மகள் வந்தாலே!!
Leave a comment