பவா, ஷைலஜா அம்மா அமெரிக்கச் சந்திப்பு – 2023

பவா, ஷைலஜா அம்மா அமெரிக்கச் சந்திப்பு

பவா அப்பா, ஷைலஜா  அம்மா ஜூலை மாதம் முழுவதும் அமெரிக்கா பயணத்தில் இருந்தனர். வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் ஜூலை பதினைந்து, பதினாறும், ராலே நகருக்கு ஜூலை பதினேழு, பதினெட்டென்றும் அவர்கள் பயணம் திட்டமிட்டப் பட்டிருந்தது. 

ஜூலை பதினாறு சார்லட்டில் நண்பர் பிரகாசம் வீட்டில் இரவுணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராலே நகரிலிருந்து சார்லட் நகரம் இரண்டு மணிநேரப் பயணம். ஒரு அரைநாள் பொழுது அவர்களோடு சந்திக்கலாம் என்றிருந்தேன்

காரில் செல்லும்போது விகடனில் பவா அப்பா எழுதிவந்த சொல்வழிப் பயணம் தொடரின் ஒலிவடிவைக் கேட்டுகொண்டே சென்றேன். 

தம்பி பிரகாசம் மூலம் பவா அப்பா, ஷைலஜா அம்மா எழுதிய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை இந்தியாவிலிருந்து வரவழைத்து இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பாகவே அவர்கள் சந்திப்புக்குத் தயாராகிவிட்டேன். எழுத்தாளர்களைச் சந்தித்தல் குறித்து ஜெ முன்னர் எழுதிய கட்டுரைகளும் நினைவிலிருந்தன. அவர்கள் படைப்புகளை வாசித்து அதைப் பற்றி அவர்களுடன் உரையாடுவது தான் அவர்களுக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. எல்லா எழுத்தாளர்களும் தனக்கான வாசர்களைச் சந்திப்பது என்பது ஆத்மார்த்தமான உரையாடல்களுக்கே.

பிரகாசம் தம்பி வீட்டில் மாலை நான்கு மணி அளவில் சென்று சேர்ந்தேன். பவா அப்பாவையும், ஷைலஜா அம்மாவையும் தேடிக் கண்கள் அலைந்தன. மாடியில் இருவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தம்பி சொன்னான். தம்பி பிரகாசத்தின் நண்பர்கள் குடும்பமாக வந்துக் காத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் பிரகாசத்தின் மனைவி ஹேமாவுக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்தனர். வெளியில் ஆண்கள் பார்பிகியூ சமைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். எல்லோரிடமும் அறிமுகம் செய்து கொண்டேன். ராலே நகரிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்திருப்பது கேட்டு நண்பர்கள் முகத்தில் மிக ஆச்சரியம்.

பேசிக் கொண்டு இருக்கும்போது நண்பர் ஒருவர் பவாவை வீட்டுக்கு வெளியில் தம் அடித்துக் கொண்டு இருக்கும்போது பார்த்தேன் என்றார். நாம் பார்க்கத் தவறிவிட்டோம் என்று வருந்தினேன். அதன் பிறகு ஓரிரு முறை நானே வீட்டின் முன்வாசல் வரை பின்புறம் புல்வெளி வழியாகச் சென்று பார்த்தேன். பார்க்க முடியவில்லை.

மறுபடியும் பின்புறம் வந்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து வீட்டின் வரவேற்பறையில் பேச்சு, சிரிப்புச் சத்தம் கேட்டது. விரைந்து சென்று இருவரின் பூரித்த முகங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பவா அப்பாவின் கால்களில் விழுந்து வணங்க அவரோ பதறிப் போய் உடனே கட்டியணைத்துக் கொண்டார். பெயர், எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்தார். பெயரைச் சொல்லி, ராலே நகரிலிருந்து வருகிறேன் என்றேன். நாளை அங்குதானே வருகிறோம் என்றார். இன்றும் உங்களோடு சில மணி நேரங்கள் செலவிடலாம் என்று தான் கிளம்பி வந்தேன் என்றேன். ஆச்சரியப் பெருமிதம் அவர் முகத்தில்.

ஷைலஜா அம்மாவிடமும் அறிமுகம் செய்து கொண்டேன். இத்தனை நண்பர்கள் பார்க்க வந்திருப்பது அவர்கள் இருவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி.

வீட்டின் பின்பக்கம் பார்பிகியூ சமைக்குமிடத்தில் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி நண்பர்கள் சுற்றியிருக்க வேண்டும் என்று விரும்புவர். அதை மேடையுறைகளில் பல முறை அவர் சொல்லியிருப்பது நினைவுக்கு வந்தது. நண்பர்களை பக்கத்தில் உட்காருங்க, சாப்பிடுங்க என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். முதல் முறையாக ஆளுமையை சந்திப்பதால் நண்பர்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டேயிறுந்தது. என்னை அவர் பக்கத்தில் அமரச் சொன்னார். 

ஓரிரு மணி நேரங்கள் நண்பர்களிடம் பேச்சு நடந்து கொண்டிருந்தது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அவரிடம் கதை கேட்க மிக ஆவல். மெல்ல இருளத் தொடஞ்கியவுடன் அவர் மொழிபெயர்த்த பால் சக்காரியாவின் ‘தேன்’ சிறுகதையைச் சொன்னார். தம்பி பிரகாசம் கைபேசியில் பதிவு செய்ய ஆரம்பிக்கும் போது வேண்டாம் என்று சொன்னார். பதிவு செய்ய பேசும்போது ஒரு செயற்கைத்தனம் வந்து விடுகிறது, இயல்பாக பேச முடியவில்லை என்றார். விகடன் சொல் வழிப் பயணம் தொடருக்கு தனி நபராக காணொளியில் பேசுவது அவருக்கு எவ்வளவு கடினமா க இருந்திருக்கும்.

மெல்லிய வெளிச்த்தில் அவர் கதை சொல்லும் போது நண்பர்கள் மத்தியில் நிசப்தம். எல்லா உணர்வுகளையும் கலந்து கொடுக்கும் ஒரு கணீரென்ற காந்தக் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. கதை முடிவில் தேன் கதை யின் மொத்த கருத்தை விளக்கிக் சொன்னார், கேள்வி எழுப்பி அவர் நிறைவு செய்யும் போது நண்பர்கள் உச்ச நிலையில் இருந்தார்கள். நண்பர்கள் மிகக் கவனமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது கதை முடிவில் அவர் கதையைத் தொகுத்து சொல்லுவதை தான்.

ஷைலஜா அம்மாவையும் கதை சொல்லச் சொன்னோம். முதலில் தயங்கினார், பவா அப்பா மாதிரி சொல்லத் தெரியாது என்றார். அம்பையின் கதை ஒன்றை சொல்லி பெண்கள் கல்லூரியில் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர்கள்கூட, திருமணத்திற்குப் பிறகு அந்தக் கல்வியை பயன்படுத்தி வேலைக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம் என்று வருத்தப்பட்டார். கூட்டத்தில் பெண்களை விட ஆண்கள் முகத்தில் பேரதிர்ச்சி. அவர் குறிப்பிட்டுச் சொன்னது அம்மாவிடம் படித்த மாணவியும் அன்று அந்தச் சந்திப்பில் இருந்தார். மாணவிகள் வாங்கியத் தங்கப் பதக்கங்கள் எல்லாம் சமையல் அறையில் கரிபிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. அனைவருக்கும் அவர்கள் மனச்சாட்சியை உழுப்பிக் கேட்டது இந்தக் கேள்வி.

இரவு 9 மணி நேரம் ஆகிவிட்டது. இப்போ கிளம்பினால் தான் பதினோரு மணிக்கு சென்று சேர முடியும் என்று அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அந்த சந்திப்பின் நினைவுகளோடு வீடு வந்து சேர்ந்தேன்.





Leave a comment