
சென்ற வருடம் டிசம்பர் ஏழு முதல் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாள நண்பர்களும், மற்ற மாணவர்களும் சேர்ந்து கவிஞர் மகுடேசுவரன் சாரிடம் இலக்கண வகுப்புகள் கற்க ஆரம்பித்தோம். மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கட்குத் தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள். நன்றி பாரா சார்.
பத்து மணி நேர வகுப்பு. ஒவ்வொரு வகுப்பும் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரமென, நான்கு சனி ஞாயிறு வகுப்புகள், ஒருநாள் தனிப்பட்ட நேர் உரையாடலென்று ஆரம்பிக்கப்பட்டது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய நேரம் மாலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை வகுப்பு நேரம். சார் இன்முகத்துடன் பொறுமையாகச் சொல்லித் தரும் அழகே தனி.
தமிழ் மொழி, சொற்கள் வரலாறு என்று முதல் வாரம் கற்றுக் கொடுத்தார். தமிழ் அடிப்படை, எழுத்துக்குரிய இலக்கணம் என்று ஆரம்பமே மிக அருமையாக இருந்தது.
இரண்டாவது வாரம் சனிக்கிழமை இருமுடி கட்டி அமெரிக்காவில் மேரிலாண்டில் இருக்கும் அய்யப்பா கோவிலுக்குச் செல்லும்போது முதல் முப்பது நிமிடங்கள் மட்டுமே அதுவும் ஒலியை மட்டும் கேட்டுக் கொண்டே கோவிலுக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். சாரிடம் முன்பே சொல்லி வைத்திருந்தேன். ஒலியை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தாலும் சரி என்றார். கோவிலுக்கென்று வந்த இடத்திலுமா வகுப்பைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று மனைவிக்குச் சின்ன வருத்தம்.
நான் கோவிலுக்குச் சென்ற அன்று குற்றியலுகரப் பகுதி நடத்தப்பட்டது. சார் குற்றியலுகரக் குறிப்புகளை பற்றி முன்பெழுதிய அவருடைய முக நூல் பதிவை நாங்கள் இருக்கும் என்வினவிக் குழுமத்தில் பகிர்ந்தார். மறுநாள் நண்பர்களிடம் முன்றைய நாள் வகுப்புக் குறிப்புகள் பகிர முடியுமா என்று கேட்டிருந்தேன். நண்பர் பாண்டியராஜன் தனிச்செய்தி அனுப்பி உதவி செய்தார்.
சாரிடம் குற்றியலுகரம் பற்றிச் சந்தேகம் கேட்டு தனிச் செய்தி அனுப்பியதற்கு, ஒன்றும் கவலைப்படாதீர்கள், மறுவகுப்பு உண்டென்றார். யாருக்கும் எந்த வகுப்பும் விடுபடலாகாது என்ற நல்லெண்ணம் அவருக்கு. அன்றிலிருந்து ஒவ்வொரு வகுப்புக்கும் மறு வகுப்பு வைக்கப்பட்டது. ஏதோ ஒரு காரணத்தால் வகுப்பைத் தவறவிட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வகுப்பை மீண்டும் கவனிக்கும்போது மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள உபயோகமாக இருந்தது அது.
மறு வகுப்புக்கும் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு அழைப்பார். ஒரு சில வகுப்புகள் வார நாட்களில் நடக்கும். ஆனால், முடிந்த வரை குறைந்தது ஒரு மணி நேரமாவது கலந்து கொள்வேன். அதன் பிறகு எனக்கு அலுவலக வேலை நேரம் ஆரம்பித்துவிடும்.
எல்லோருக்கும் எந்த நேரம் உகந்தது என்று கேட்டு மறுவகுப்பு நேரத்தை முடிவு செய்வார். சார் இந்திய நேரம் அதிகாலை ஐந்து மணிக்கு முன்பு எழுந்து, என்வினவிக் குழுமத்தில் வகுப்புக்கு ஐந்து, பத்து நிமிடங்களுக்கு முன்பு நினைவூட்டல் செய்தியிட்டு வகுப்புகள் எடுத்த அனுபவங்கள் எல்லாம் உண்டு. இந்தக் காலத்தில் எந்த ஆசிரியர் இப்படி அதிகாலையில் எல்லாம் எழுந்து வகுப்பு எடுப்பார்?
ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் அவர்களே ஆர்வமாகக் கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று விரும்புவார். தொடர், தொகை அமைத்தல், வலி மிகும் மிகா இடங்கள் , புணர்ச்சி இலக்கணம் எல்லாவற்றிலும் நாங்களும் ஆர்வமாக பதில் கூறினோம். இந்த வார்த்தை, வாக்கியம் வராதே, இது தமிழ் சொல் அல்ல என்று நமக்குச் சந்தேகம் தீரும் வரை சொல்லிக் கொடுப்பார்.
குற்றியலுகரம், முற்றியலுகரம், தொகை, தொடர் , புணர்ச்சி இலக்கணம், கட்டாயம் வலி மிகும், மிகா இடங்கள், எண்கள், சிறப்பு விதிகள் என்று கற்றுக் கொண்டது மிக மிக அதிகம்.
அகராதியை எப்படிப் பயன்படுத்துவது, சிறந்த அகராதி எது, ஒரு சில இலக்கண வகுப்புகளைப் புரிய வைக்க நன்னூல் சூத்திரங்களை விளக்கிச் சொல்லல், வட சொற்கள் எவையென்று நாங்கள் எல்லோரும் பயன்பற்றது மிக அதிகம்.
டிசம்பர் ஏழு ஆரம்பித்த வகுப்பு, மறு வகுப்புகள் எல்லாம் சேர்ந்து ஜனவரி இருபத்தொன்பது அன்றே முடிந்தது. பத்து மணி நேர வகுப்புக்கு ஏறக்குறைய இருபது மணி நேரம் வகுப்புகள் எடுத்திருக்கிறார்.
மகுடேசுவரன் சார் வகுப்புகள் எடுக்கிறார் என்றால் நண்பர்கள் தவற விடக்கூடாது, கண்டிப்பாக பயன் படுத்திக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைப்பேன். இலக்கணத்தை இவ்வளவு சுவாரசியமாக ஒரு ஆசிரியர் சொல்லித் தர முடியுமா என்ற வியப்பு இன்னும் இருக்கிறது எனக்கு.
இந்தப் பதிவைக் கூட எந்த இலக்கண பிழையும் இல்லாமல் எழுதியிருக்கிறேனா என்றுத் தெரியவில்லை. ஆனால், எழுதெழுத மேம்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.
மிக்க நன்றி மகுடேசுவரன் சார் 🙏
Leave a comment