
பதின் பருவத்தில் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆசை. அப்பா சிலம்பம் கற்றுக் கொண்டவர். ஆனால், பசங்களைச் சிலம்பம் கற்றுக் கொள்ள ஏனோ அனுமதிக்கவில்லை. படிப்பு தான் முக்கியம், வேறு எதிலும் கவனம் தேவையில்லை என்ற நினைப்பு.
பள்ளிக் காலத்தில் என்னை விட வயதில் மூத்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வீட்டின் பின்புறம் ஆசான் ஒருவரிடம் ஓரிரு நாட்கள் கற்றுக் கொண்டோம். அப்பாவுக்குத் தெரியவந்து கடும் கோபமாக முறைத்தார். வேறு இடத்தைத் தேர்வு செய்து நண்பர்கள் தொடலரானர். என் சிலம்பம் ஆசை அத்தோடு நின்று விட்டது.
கரோலினா கலைக்கூடம் மூலம் சென்ற வருடம் தமிழ் சங்க பொங்கல் விழாவில் என் மனைவி மாரி நாராயணன் சிலம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடைய தோழியே ஆசான். சிலம்பம் பயில்வதில் எனக்கு மூத்தவர்.
இரண்டாயிரத்து இருபத்து இரண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பித்த புதிய அணியில் சேர்ந்து கொண்டேன். ஒரு வருடமாகக் கற்றுக்கொண்டு வருகிறேன். நடுவில் கோடை விடுமுறை, மற்ற சின்னச் சின்ன விடுமுறைகளும் இருந்தன. முதல், மூன்று, ஐந்து சனிக்கிழமைகளில் காலை பத்து மணி முதல் பதினொன்று வரை வகுப்பு. நாங்கள் கற்றுக் கொள்வது ‘அலங்காரச் சிலம்பம்’. சிலம்பம் சுற்றுவதைப் பார்க்க அழகாக இருக்கும். போர் அல்லது அடிமுறைச் சிலம்பதிலிருந்து மாறுபட்டது. எங்களுக்கு அசோக் ஆசான் வகுப்பு எடுத்தார். பாரத் மற்றும் தர்மர் முதன்மை ஆசான்கள்.
ஒரு சில பயிற்சிகளை நாம் நன்றாகக் கற்றுக் கொள்ளும் வரை திரும்பத் திரும்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கான காணொளிகளையும் வகுப்பு முடிந்தவுடன் பாரத் அல்லது அசோக் ஆசான் அனுப்பிவைப்பார்கள். இது வீட்டிலேயே நமக்குப் பயிற்சி செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
ஆரம்பித்தில் இலகுவாக இருந்த சிலம்பம் முதல் நிலை வகுப்புகள் போகப் போக கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஆனால், திரும்பத் திரும்ப பயிற்சி செய்தால் முடியாததொன்றுமில்லை.
இந்த வருடக் கரோலினா தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பாரத் ஆசான் சிலம்பம் நிகழ்வுக்கு பதிவு செய்திருந்தார். ஒவ்வொரு நிலையில் உள்ள மாணவர்களுக்குத் தனித்தனி பயிற்சிகளும், மொத்தக் குழுவுடன் சேர்ந்து செய்யும் போது எந்த அணி எந்த வரிசையில் வர வேண்டும், எத்தனை வினாடிகளில் முடிக்க வேண்டும் என்ற வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வோர் அணி வரும் போதும் திரைப்படப் பாடல்கள் பின்னணியிசை ஒலிக்கும் நேரத்துக்குள் சிலம்பம் சுற்றவேண்டும்.
எங்கள் நிலை வகுப்பில் என்னுடன் சேர்ந்து நான்கு மாணவர்கள். சென்ற வருடம் ஆரம்பிக்கும் போது பத்து மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், தொடர்ச்சியாக இப்போது வரை கலந்து கொள்பவர்கள் என்னையும் சேர்த்து நால்வர்தான்.
எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முப்பது முப்பது வினாடிகளாக இரண்டு தடவை வந்து சிலம்பம் சுற்றுவது. பொங்கல் விழாவுக்கு ஒரு வாரம் முன்பு கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முப்பது வினாடிகளில் முடிக்க வேண்டியது ஐம்பது வினாடி வரை எடுத்தது. இன்னும் கொஞ்சம் வேகமாக சுற்றுங்க என்று ஆசான் சிரித்துக் கொண்டே சொன்னார். எங்களை விடுவதாக இல்லை. வேகமாகச் சுற்றும் போது கை வலிக்கும் மற்றும் தவறுதலாக சிலம்பம் சுற்றிவிடுவோம்.
பொங்கல் விழாவுக்கு இன்னும் நான்கைந்து நாட்கள் தான் உள்ளன. அதனால், எல்லோரும் வார நாட்களில் கூடி, கண்டிப்பாகக் கூடுதல் பயிற்சி செய்யச் சொன்னார். நேரத்திற்குள் முடிக்க வேண்டியது மிக முக்கியம், எல்லா நிலை மாணவர்களுக்கும் சேர்ந்து மொத்தம் ஏழிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை தான் என்றார்.
எங்களுக்கு வார வகுப்பு எடுக்கும் அசோக் ஆசான் கூடுதல் பயிற்சிக்கு உதவுவதாகச் சொன்னார். அசோக் ஆசான், என் வகுப்பு நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து தனி வாட்ஸ்அப் குழுமம் ஆரம்பித்து கூடுதல் பயிற்சி தொடர்பாக அதில் செய்தி பரிமாறிக் கொண்டோம். பயிற்சிக்கு முன்னர் தேநீர் தயாரித்து வைத்திருப்பார்.
அசோக் ஆசான் அவர் வீட்டின் பின்புறம் வெளிச்சம் இருக்கும்வரை, பின்னர் கார் நிறுத்தும் இடங்களில் வைத்தும் பயிற்சி கொடுத்தார். இரண்டாவது நாளே ஐம்பத்தைந்து விநாடிகளிலிருந்து முப்பத்தைந்து வினாடிகளுக்கு கொண்டு வந்து விட்டோம். சின்னச் சின்ன திருத்தங்களும் சொல்லிக் கொடுத்தார். நல்ல விதமாகச் சுற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் வந்துவிட்டது.
கூடுதல் பயிற்சியால் வலது கை விரல்களில் காயம் ஏற்பட்டுவிட்டது. கை விரல்களிலும், தோள்களிலும் நல்ல வலி. குணமாக மருந்து தடவி, இடையில் ஒரு நாள் பயிற்சியில் கலந்துக் கொள்ள வில்லை. விழாவன்று நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போகக் கூடாது என்ற கவலை.
பொங்கல் விழாவுக்கு முந்தைய நாள் எல்லோருக்கும் சேர்ந்து இறுதிப் பயிற்சி நடந்தது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பின்னணி இசை ஒலித்து மாறுவதற்குள் வேகமாக, ஒரே அலைவரிசையில் சுற்றிவிட்டோம்.
போர் வீரன் வேட்டிக் கட்டும் முறை எப்படி என்று காணொளி அனுப்பி அதைப் பார்த்து வீட்டில் கட்டிப் பார்க்குமாறு பாரத் ஆசான் கேட்டுக் கொண்டார்.
மறுநாள் பொங்கல் விழாவன்று சிலம்பம், இரு வேட்டிகள், வண்ணச்சட்டை, இடுப்பில் கட்ட துண்டு எல்லாம் எடுத்து வந்திருந்தேன். என் நிலை நண்பர்கள் மாலை பறை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டனர். அவர்கள் அணிந்திருந்ததோ பொங்கல், தீபாவளிக்கு உடுத்தும் வண்ண பட்டுச்சட்டை. நான் கொண்டு வந்திருந்ததோ வெறும் வண்ணச்சட்டை. முன்பாகப் பாரத் ஆசானிடம் கேட்டபோது ‘அந்த மாதிரிச் சட்டை இல்லையா’ என்றுக் கேட்டார். ‘வீட்டில் இருக்கிறது, வீடும் அருகில்தான் இருக்கிறது, சென்று எடுத்து வருகிறேன்’ என்றேன். ‘நம் நிகழ்வு வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும், ஒன்றும் அவசரமில்லை, மெதுவாகவே சென்று வாருங்கள்’ என்றார். பதினைந்து நிமிடங்களில் சென்று எடுத்து வந்துவிட்டேன்.
எங்கள் நிகழ்வுக்கு நான்கைந்து நிகழ்வு முன்பாக பாரத் ஆசானிடம் வேட்டிக்கட்ட உதவுமாறு சொன்னேன். கழிவறையில் வைத்துக் கட்டிவிட்டார். மிடுக்கான களை வந்துவிட்டது. நண்பர்கள் ஒரு சில பேர் என்ன இந்தக் கோலம் என்றனர். சிலம்பம் சுற்ற வேறு என்ன கோலம் வேண்டும், புரியவில்லை.
நிகழ்வில் பெரிய தவறு ஏதும் இல்லாமல் எங்களால் இயன்ற வரை நன்றாகவே சிலம்பம் சுற்றினோம்.
வாசிப்பும், எழுத்தும் சார்ந்த தீவிர உலகத்தில் வாழ்பவன் நான். சிலம்பம் கற்றுக் கொள்ளும் சின்ன வயது ஆசை இன்று தான் நிறைவேறியது.
சிலம்பம் வகுப்பில் சேர்ந்து இன்று மேடை ஏறும் வரை வந்துவிட்டேன். இது முதல் நிலை மட்டும்தான்.
ஆசான்கள் பாரத், தர்மர் & அசோக் மூவருக்கும் மிக்க நன்றி. என் சக மாணவர்கள் கண்ணன், அன்பு, வித்யாவுக்கும் நன்றிகள் பல.
Leave a comment