பெப்ரவரி 11 கரோலினா தமிழ் சங்க பொங்கல் விழா கவியரங்கம் நிகழ்வில் ‘இல்லறமே நல்லறம்’ தலைப்பில் வாசித்த எனது கவிதை. தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் எழுதிப் பார்த்தது:
அன்பும் அறனும்
பூவும் மணமும்
தமிழும் அழகும்
வல்லினமும் மெல்லினமும்
போல மணமக்கள்
வாழ்வது
பண்பும், பயனும்
உள்ள நல்வாழ்க்கை அறம்
பழிக்குப்பயம்
உள்ளதை பிறர்க்குப்
பகுத்துண்ணல் நல்லறம்
அறநெறியில் நின்று
வாழும் வாழ்க்கை
தெய்வத்துக்குச் சமம்
அறவழியில் நடந்து
பிறரையும் நடக்கச் செய்யும்
இல்வாழ்க்கை
துறவிகள் நோன்பைவிட
உத்தமம்
மனைவியோடு வாழ்பவன்
பிள்ளைகள், பெற்றோர், உறவினர்
மூவர்க்கும் நல்வழி செய்யும்
இல்லறம் நல்லறம்
கணவன் மனைவியருக்குள்
அன்பும் பிணைப்பும்
அறநெறிப்படி வாழ்வது
இல்லற வாழ்க்கையின்
பண்பும், பயனும்
பழிப்புக்கு இடமில்லாத
இல்வாழ்க்கை நல்லறம்
.
நல்வாழ்வுக்கான முயற்சிகளை
மேற்கொள்வோர்
இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து
வாழ்வது அறம்
அறநெறி இல்வாழ்க்கை
பயனை வேறு நெறியில்
பெற்றிடக் கடினம்
இறந்து தென்திசையில் வாழ்பவர்,
தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார்,
தான் என்னும் ஐவருக்கும்
செய்ய வேண்டியதைத்
தவறாமல் செய்வது
அறம்
பாவத்திற்குப் பயந்து
தேடிய பொருளை
உறவோடு பகிர்ந்து
உண்பவனின் பரம்பரை
அழிவதில்லை ஒருகாலும்
மனைவி மக்களிடத்தில் அன்பும்
தேடிய பொருளை
சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்வது
பேறறம்
கணவன் மனைவியை
மனைவி கணவனைச்
சந்தேகிக்காமல் வாழ்வது
நல்லறம்
கைபேசியில், சமூக வெளியில்
நேரம் செலவழிக்காமல்
மனைவி மக்களோடு
நேரம் செலவழிப்பது
உன்னதம்
பிள்ளைகள் பெருமைப்படும்
பெரு வாழ்வு வாழும்
இல்லறமே நல்லறம்
பிள்ளைகள் பெருமைப்படும்
பெரு வாழ்வு வாழும்
இல்லறமே நல்லறம்
Leave a comment