தமிழன் என்று சொல்லடா – 2022 முத்தமிழ் விழா கவிதை

கரோலினா தமிழ் சங்க உறவுகள்
அனைவருக்கும்
முத்தமிழ் விழா வாழ்த்துகள்

யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்று பாருக்குரைத்த மூத்தகுடி மகன்

சங்க இலக்கியங்கள்
காப்பியங்கள் படைத்து
மொழியில்
அழகோடு, அறிவைச் சேர்த்தவன்

ஒன்பது எழுத்துகளில்
பஞ்சாங்கம் கணித்தவன்

உலகமே வியக்கும்
வானியல், கணித, ஜோதிட
வல்லுநன்

தொழிலுக்குப் புறப்படும்
நேரத்தை பறவைகளின்
ஒலி மூலம் தெரிந்தவன்

கோவில் நகரங்கள்
அமைத்தவன்

கோவிலைச் சுற்றிய
வீதிகளுக்கு
தமிழ் மாதங்கள் பெயர் வைத்து
அழகு பார்த்தவன்

சங்கம் அமைத்து
தமிழ் வளர்த்தவன்

கழுகு மலையில்
சமண கலாசாலை
அமைத்தவன்

பரம்பரை பரம்பரையான
உறவு முறைகளுக்கு
பெயர் வைத்து அழகு
பார்த்தவன்

சிந்து சமவெளியில்
தமிழ் ஊர் பெயர்களுக்கு
சொந்தக்காரன்

ஆயிரம் வருட பழைய
தமிழ் மருத்துவம்,
நெல் சாகுபடி செய்தவன்

தமிழரின் காலப் பெருமைகளுக்கு
கார வேலன் கல்வெட்டுகள் அமைத்தவன்

ஆதிச்ச நல்லூர்
தொல்பொருள் துறை
ஆராய்ச்சி பேசும்
பழம் பெருமைக்கு
சொந்தக்காரன்

அயல் நாட்டு ஆலயங்களில்
தமிழ் கல்வெட்டுகள் அமைத்தவன்

அரேபிய, கிரேக்க, ரோம நாட்டினருடன்
வணிகம் செய்தவன்

லத்தின், லாவோஸ் மொழிகளை விட
பழமையும் பெருமையும் வாய்ந்த
மொழிக்குச் சொந்தக்காரன்

மீன் கொடி, விற்கொடி, புலிக்கொடியில்
ஆன்மீகத்தை, வீரத்தை உலகுக்கு
பறை சாற்றியவன்

ஏறு தழுவுதலில் பாருக்கு
வீரத்தை காட்டியவன்

அகிம்சை, ஆயுத போராட்டங்கள்
இரண்டுக்கும் வரிந்து கட்டி
நின்றவன்

வாடிய பயிரைக்
கண்டவுடன் வாடியவன்

விஞ்ஞானத்தோடு,
மெய் ஞானத்தையும்
புகட்டியவன்

வீரம், அரசியல், மருந்து, சமூகவியல்
இயர்க்கையென அனைத்துக்கும்
இலக்கிய படைப்புகள் இயற்றியவன்

உயிர், இயற்கை,செல்வவளங்கள்,
போர், செயல் திறன்கள்,
அரசியலமைப்பு அனைத்தையும்
காப்பியங்களில் கண்முன் நிறுத்தியவன்

அரசவை நடுவே
கன்னித் தமிழ்
கவிபாடல்கள் வளர்த்த புலவன்

அரங்கத்தில் நடித்து ஆடி பாடி
மக்கள் மனதை
கவர்ந்த நாடகங்கள் அமைத்தவன்

சைவ, வைணவ பக்தி பாடல்கள்
பக்தி இலக்கியங்கள்
நாடகங்கள்
கம்பராமாயண பாடல்கள்
ஐம்பெரும் காப்பியங்களென
தமிழ் வளர்த்தவன்

மணிமேகலை காப்பியத்தில்
மதுவிலக்கு பரப்புரை செய்தவன்

அயல் மொழிகளில் தமிழ் சொற்களின்
ஆதிக்கம் செலுத்தியவன்

நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட
ஆலயங்கள், சிற்பங்கள் அமைத்தவன்

ஒரு நூல் இழை கோணல் கூட
இல்லாத ஆயிரம் கால்
மண்டபங்கள் கட்டியவன்

இசைத் தூண்கள்
அமைத்தவன்

துல்லிய
தசம கணக்கீடு
பயன்பாடு செய்தவன்

ஓரழுத்து சொல் பொருள் கொள்ளும்
மொழி சிறப்புக்குச் சொந்தக்காரன்

தொன்னுத்தி ஒன்பது பூக்கள்
கூறும்
குறிஞ்சி பாட்டு இயற்றிய கபிலன்

விலங்குகள், பட்டாடைகள், அணிகலன்களேன
பலவற்றுக்கும்
ஒன்றுக்கு மேற்பட்ட
பெயர்கள் சூட்டியவன்

நாப்பதி ஏழு வகை
நீர்நிலைகள் அமைத்தவன்

மக்களுக்கான கலை நிகழ்ச்சிகள்
நாட்டுப்புறக் கலைகள்
நடத்தியவன்

நவீன, பின் நவீனத்துவ தமிழ் இலக்கியங்கள்
படைத்தவன்

கோவிட் தொற்று காலத்தில்
தொலைக்காட்சி, இணைய வழி
கூட்டங்களில்
முத்தமிழ் கலை நிகழ்ச்சிகள்
அரங்கேறியவன்

கைபேசியில் தட்டச்சு செய்து
நாவல்கள் வெளியிட்டவன்

அறிவியல், கணித புனைவுகள்
படைத்தவன்

மின்னணு, ஒலி வடிவ
தமிழ் புத்தகங்கள் வெளியிட்டவன்

கைபேசி செயலிகளில்
தமிழ் இதழ்கள் யென
காலத்திற்கேற்ப தன்னையும்
தன் மொழியையும்
புதுப்பித்துக் கொள்பவன்

உலக இலக்கியங்கள் தமிழுக்கும்
தமிழிலிருந்து பிற மொழிக்கும் தயாராகும்
மொழிபெயர்ப்புகள் செய்பவன்

அயல் நாடுகளிலும்
தமிழ் சங்கங்கள் அமைத்து
மொழி, கலாச்சாரம் பரப்புவன்

கயானா நாட்டின்
பிரதமராக
முதல் தமிழன்

பதினோரு வயதில்,
தனக்குரிய இணைய தளத்தைத்
தானே வடிவமைத்தவள்

வெளிநாட்டு உயர் நிறுவனங்களில்
தலைமை பொறுப்புகளில்
அமர்ந்தவன் என

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

தமிழன் என்று சொல்லடா
தனியே ஒரு குணம் உண்டுடா




Leave a comment