முத்தமிழ் - நேற்று இன்று நாளை
அறிவுக்கு விருந்து படைத்த
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்று பாருக்குரைத்த மூத்தகுடி மக்கள்
அரசவை நடுவே
செருக்கு நற்புலவர்களால்
கன்னித் தமிழ் கவிபாடல்கள்
பொற்காசு, பட்டயங்களென
பரிசு, பாராட்டு மழைகள்
யாழிசைத்து பண் மீட்டி
பாடும் பாடல்களுக்கு
நாட்டியத் தாரைகளின்
ஒயிலான நடனங்கள்
அரங்கத்தில் நடித்து ஆடி பாடி
மக்கள் மனதை
கவர்ந்த நாடகங்கள்
மன்னர்களையும், தெய்வங்களையும்
போற்றி பாடப்பட்ட பாடல்கள்
சைவ, வைணவ பக்தி பாடல்கள்
பக்தி இலக்கியங்கள்
நாடகங்கள்
கம்பராமாயண பாடல்கள்
ஐம்பெரும் காப்பியங்களென
கொஞ்சமாவா கோலோச்சிக் கொண்டிருந்தது
நேற்றைய முத்தமிழ்
—----------------------------------------------------
இன்று மக்களே மகேசன் என்று
மக்களுக்கான கலை நிகழ்ச்சிகள்
அடிப்படை மனித மேன் உணர்வுகளை
முளைக்க வைக்கும் மழைத் துளிகளாக
நவீன தமிழ் இலக்கியங்கள்
வெடிபடு மண்டத் திடிபட தாளம் போட
முண்டாசு கவிஞனின் பித்து பிடிக்க வைக்கும் வரிகள்
ஆட்டங்கள், கூத்துகளென
வீதிக்கு வந்த நாட்டுப்புறக் கலைகள்
சுடச் சுட அச்சில்
நவீன தமிழ் இலக்கியங்கள்
திரைத்துறை வாய்ப்புத் தேடி
இன்று நாடக கலைஞர்கள்
செவிக்கு விருந்துபடைக்கும்
திரைத்துறை பாடல்கள்
கோவிட் தொற்று காலத்தில்
தொலைக்காட்சிகளில், இணைய வழி
கூட்டங்களில் அரங்கேறி வரும்
முத்தமிழ் கலை நிகழ்ச்சிகள்
நோய் தொற்று காலத்தால்
சின்ன தொய்வு இருந்தாலும்
கொஞ்சமும் சளைத்த நிலையில் இல்லை
இன்றைய முத்தமிழ் கொண்டாட்டங்கள்
—----------------------------------------
நாளை எப்படி இருக்கும்
இயல், இசை, நாடகம்
கைபேசியில் தட்டச்சு செய்து
வெளியாகும் நாவல்கள்
உலகத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களாக
இணையத்தில் கதைகள்
நவீன யுகத்துக்கேற்ப தன்னை புதுப்பித்து
புனையப்படும் அறிவியல், கணித புனைவுகள்
மின்னணு, ஒலி வடிவ
தமிழ் புத்தகங்கள்
கைபேசி செயலிகளில்
தமிழ் இதழ்கள்
உலக இலக்கியங்கள் தமிழுக்கும்
தமிழிலிருந்து பிற மொழிக்கும் தயாராகும்
மொழிபெயர்ப்புகள்
உலக கலைஞர்கள் இசையில்
மெட்டு போடப்படும் பாடல்கள்
நோய் தொற்று காலம் முடிந்தாலும்
தொடரும் இணைய வழி நாடக, இசை,
கலை நிகழ்ச்சிகள்
என்று இளமையாக, நவீனமாக
தன்னை புதுப்பித்துக்கொள்ளும் நிலையிலேயே
இருக்கும் நாளைய முத்தமிழ்!!.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
Leave a comment