ஸ்மித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம்

ஸ்மித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம்

கோடை விடுமுறையில் குடும்பத்தோடு வாஷிங்டன் டிசி யில் இருக்கும் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்தோம். பயணங்களில் நான் விரும்பி பார்க்கும் இடங்களில், எப்போதும் அருங்காட்சியங்களும் முக்கியமானதாக இருக்கும். கோவிட் தொற்றுநோய் காலமாதலால், முன்னரே முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாள், நேரத்திற்கு மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அருங்காட்சியங்கள் எப்போதும்  அழகும், கலையம்சமும்  நிறைந்ததொரு மாய உலகம் போல் எனக்குத் தோன்றும். நேர்த்தியான வேலைப்பாடுடைய கட்டிடங்கள், கண்ணை உறுத்தாத விளக்கு வெளிச்சம், ஒவ்வொரு வித்தியாச கலையம்ச  படைப்புகள் என எப்போதும் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கக் கூடியது அருங்காட்சியத்தைத் சுற்றிப்பார்த்தல்.

அருங்காட்சியகத்தைப் பற்றிய மிகச் சுருக்கமான வரலாறு இது. ரென்விக் கேலரி அமெரிக்க கைவினைப்பொருட்களைக் கொண்ட ஒரு கிளை அருங்காட்சியகமாக 1972 ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. அருங்காட்சியகத்தின் பெயர் அமெரிக்க கலைக்கான தேசிய அருங்காட்சியகமாக 1980 ல் மாற்றப்பட்டது. அப்போதிருந்து, ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் கலைஞர்களின் படைப்புகளை கையகப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் என்பதாக இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அருங்காட்சியகம் ஸ்மித்சோனியன் அமெரிக்கன் ஆர்ட் மியூசியம் (SAAM ) என்று எளிதில் நினைவுகூரக்கூடிய பெயராக முன்மொழியப்பட்டது. அக்டோபர் 2000 இல் இந்த மாற்றத்தை காங்கிரஸும் அங்கீகரித்தது.

கோவிட்  தொற்றுக்காலமாதலால் கட்டாயம் எல்லோரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில் அருங்காட்சியத்தைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தனர். முதல் தளத்தில் உள்ளே நுழைந்தவுடன் வலது புறத்தில் சிறப்பு கண்காட்சி புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதற்கு நேர் எதிராக மறுபக்கம் சமீபத்திய சேகரிப்புக் கலைப்பொருட்கள், புகைப்படங்களின் தொகுப்புகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் நாம் பார்க்கச் செல்லும்போது நம்மை ஆச்சரியப் படுத்தும் வகையில் பல அழகான புதுத்தொகுப்புகள் இந்த அரங்கில் இருக்கும். மேலும், முதல் தளத்தின் வலது புறத்தில் கிபி 1600 முதல் 1900 வரையிலான புகைப்படங்களும், கலைப்படைப்புகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு கலை படைப்பும், அதன் அருகில் இருக்கும் குறிப்பையும் சேர்ந்து வாசிக்கும்போது நம்மை அந்த கலைப்படைப்பு கால நினைவுகளுக்கு கொஞ்ச நேரமாவது அழைத்துச் செல்லும்.

கிபி 1600 முதல் 1900 வரையிலான பகுதியில் இருந்து சில படைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தின் இடது  புறத்தில் “அமெரிக்க  அனுபவம்” என்ற தலைப்பில் பல கலைபடைப்புகள் தளத்தை அலங்கரிக்கின்றன. அந்த வரிசையில் மையத்தில் “நாட்டுப்புற மற்றும் சுய கற்பித்தல் கலை” தொகுப்புகள் உள்ளன. அதற்கடுத்து சிறப்பு கண்காட்சிகள் கலைத்தொகுப்புகளும் உள்ளன.  அரங்கின் மையப்பகுதியில் அங்கங்கே சற்று இளைப்பாறுவதற்க்கு இருக்கை வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இருக்கின்றன.

முதல் மாடி கேலரிகளைப் பார்வையிடும்போது, ​​பணக்கார, சக்திவாய்ந்த நபர்களின் உருவப்படங்கள் அத்தகைய அந்தஸ்து இல்லாதவர்களை விட அதிகமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். பெண்களை விட ஆண்களின் படங்களும், பிற பின்னணியை விட ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் படங்களும் அதிகம்.

1930 களில் அமெரிக்காவில் கலைஞர்களுக்கு முக்கியயமான நேரமாக இருந்தது. ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தத் திட்டங்கள் மூலம், மத்திய அரசு அவர்களுக்கு வண்ணம் தீட்ட பணம் கொடுத்தது. நாடுகளின் நிலத்தையும், மக்களையும் கவனத்தில் கொண்டு வரையும்படி அரசாங்கம் அவர்களை வலியுறுத்தியது. அடுத்த பத்து வருடங்களில், இரண்டாம் உலகப் போர் நிறுத்தப்படும் வரை நாட்டின் கலைஞர்கள் நிலப்பரப்பின் அழகையும், அமெரிக்காவின் உழைக்கும் மக்களின் தொழிலையும், பெரும் மந்தநிலையிலும் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நிலவும்  சமூக உணர்வுகளை தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தினர். அமெரிக்கா அனுபவத்தில் உள்ள பல ஓவியங்கள் 1934 ல் கலைஞர்களை வேலைக்கு அமர்த்த வடிவமைக்கப்பட்ட ஒரு சோதனைத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டது; மற்றவை WPA இன் அனுசரணையில் தயாரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து. பள்ளிகள், தபால் நிலையங்கள் மற்றும் பிற அரசு பொது கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்கள், நமது வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில் அமெரிக்கர்களின் நெகிழ்ச்சிக்கு சான்றாக இவை நிற்கின்றன.

அருங்காட்சிய கட்டிடத்தின் மையப்பகுதியில் உள்புறம் “கோகோட்” என்று அழைக்கப்படுகின்ற மிகப் பெரிய முற்றமொன்று இருக்கிறது. முதல் தளத்தின் நான்கு பக்கங்களில் இருந்தும் மையப்பகுதில் இருக்கும் இந்த முற்றத்திற்க்கு இளைப்பாறச் செல்ல முடியும்.  அழகான, வண்ணமயமான செடிகளும், நீரூற்றுகளும் இருக்கின்றன இந்த முற்றத்தில். குடும்பத்தோடு சுயபடம் எடுத்துக் கொள்ளச் சிறந்த இடம் இது. மக்கள் கூட்டம் கூட்டம் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் காட்சியைப் பார்க்க முடியும். மறுபடியும் இங்கிருந்து நாம் கடைசியாகப் பார்த்த பிரிவுக்கு திரும்பியோ இல்லை முதல் தளத்தின் வேறு பிரிவுகளுக்கோச் செல்ல 3 நுழைவாயில்கள் உள்ளன.

இரண்டாம் மாடியில்  ஆரம்ப குடியரசு, மேற்கத்திய கலை நிலப்பரப்புகள், நவீன கலை, தென்மேற்கு கலை, ஷேக்கர் தளபாடங்கள், ஆரம்பகால அமெரிக்கா, சிறப்பு கண்காட்சிகள், நீதிக்கான போராட்டம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் போன்ற பல பிரிவுகளில் அழகான கலைத் தொகுப்புகள் உள்ளன. இந்தத் தளத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிரந்தர கண்காட்சி இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு புகைப்படமுமே மிகத் தத்ரூபமாக மிகப் பெரியளவில் உள்ளன.

மூன்றாவது மாடியில் உள்ள காட்சியகங்கள் இருபதாம் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அமெரிக்கர்களின் உருவப்படங்களை எடுத்துக்காட்டுகின்றன. மூன்றாம் தளத்தில் தேசிய உருவப்பட காட்சியகம் (National Art Gallery ) நவீன மற்றும் சமகால கலை, லிங்கன் கூடம், அமெரிக்க கலையில் வாகனஊர்திகள், லூஸ் அடித்தள மையம், இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கர்கள், சமகால அமெரிக்கர்கள் மற்றும் சிறப்பு கண்காட்சிகள் போன்ற பல பிரிவுகளில் படைப்புகள் உள்ளன. 

மூன்றாவது மாடியில் இருக்கும் தேசிய உருவப்பட காட்சியகம்1968 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, தேசிய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை கணிசமாக பாதித்த தனிநபர்களின் உருவப்படங்களை காட்சிப்படுத்துவதில் தேசிய கலைக்கூடம் கவனம் செலுத்தியுள்ளது. 1600 முதல் 1900 வரையிலான ஓவியங்களில் உள்நாட்டு அமெரிக்கர்கள், ஐரோப்பிய காலனித்துவவாதிகள், மதகுருமார்கள், வீரர்கள், எழுத்தாளர்கள், நாட்டை வடிவமைக்க உதவிய கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பலர் இருக்கிறார்கள். 

தேசிய கலைக்கூடம் இந்த ஏற்றத்தாழ்வை ஒப்புக்கொள்கிறது, மேலும் நமது தேசத்தின் விரிவான கதையை முன்வைப்பதற்காக அதன் தொகுப்பை பல்வகைப்படுத்த தொடர்ந்து பாடுபடுகிறது. நீங்கள் பலவற்றைப் பார்க்கும்போது, ​​இந்த சிக்கலான கட்டமைப்புகளின் வாழ்க்கை மற்றும் எழுபதாம் நூற்றாண்டிலிருந்து சமூகம் மற்றும் உருவப்படம் மாறியுள்ள வழிகளைக் கருத்தில் கொள்ள தேசியக் கலைக்கூட படைப்புகள் நம்மை ஊக்குவிக்கிறது.

நேரமும், ஆர்வமும் இருந்தால் ஒவ்வொரு தளத்தில் உள்ள படைப்புக்களை பார்க்கவே ஒரு நாள் தேவைப்படும். அருங்காட்சியைச் சுற்றிபார்த்துவிட்டு வெளியில் வரும்போது மனம் கொள்ளா சந்தோஷமும், அமைதியும், அழகும் நிறைந்து பலவிதமான நினைவுச் சேகரிப்புகளோடு, திரும்ப எப்போது வருவோம் என்ற ஏக்கத்தோடே நிறைவு கொள்ள வைக்கிறது இந்த அருங்காட்சி பயணம்.





Leave a comment