தமிழர் திருநாளாம் பொங்கல் – அன்றும் இன்றும் என்றும்

தமிழர் திருநாளாம் பொங்கல் – அன்றும் இன்றும் என்றும்

மாவிலை, காணுப்பிள்ளை கலந்து
தோரணம் கட்டி
வெடவெடப்பு குறையா புது துணியில்
மஞ்சள் தடவி
நெய், முந்திரி, ஏலக்காய் மண பொங்கலிட்டு
புதுப்பானை பொங்கலோட
சூரியனுக்குப் படைத்து
பருத்து நீண்ட
பனங்கிழங்கு சாப்பிட்டு
சிவப்புடுருவிய
அடிக்கரும்பை கடித்துச் சுவைத்து
வயதொத்த நமுட்டுச்சிரிப்பு அழகு பெண்களை
பார்த்து ரசித்து
விளையாட்டுப் போட்டியில்
சோப்பு டப்பா பரிசு வாங்கி
இனம்புரியா சந்தோஷத்தில்
நாள் முழுதும் திளைத்து என
எத்தனை எத்தனை நினைவுகள்
அன்றைய பொங்கல் விழாவில்

இன்றும் நாங்களும்
பொங்கல் கொண்டாடுகிறோம்…ஆம்
தொலைக்காட்சி பொங்கல் அறிவிப்புகளில் தயாராகி
மண்டைவெல்லம் உடைக்க
சுத்தி தேடி
அழுத்த குக்கர்
நெய் பொங்கல் வைத்து
கெஞ்சிக் கூத்தாடி
குழந்தைகளை குளிக்க வைத்து
தன் புதுத்துணியில்
மஞ்சள் வேண்ட்டாமுன்கிற
குழந்தைகளை முறைத்து

முகப்புத்தகம், பகிரியில்
வாழ்த்துச் செய்தி பரிமாறி
பட்டிமன்ற நடுவர் தீரிப்பை
நாலு தடவை அசைபோட்டு
நண்பர்கள் கூடி விருந்துண்டு,
புது படம் பார்த்து என
வித்தியாசமாகத்தான்,
ஆனால், நாங்களும்
கொண்டாடுகிறோம் இன்று பொங்கல்.

என்றும் அல்லதை நீக்கி,
நல்லதை நீட்டி
கொண்டாடுவோம்
தைத்திருநாளை
அசைபோடுவோம்
திருநாள் நினைவுகளை

தமிழன்தான் பெருமைகளைப்
போற்றிடுவோம்
உழவையும், உழவனையும்
காத்திடுவோம் என்றும் !!





Leave a comment